Breaking News
Home / latest-update / மோடி வருகையின்போது கருப்புக்கொடி காட்டுவதா?- எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கண்டனம்

மோடி வருகையின்போது கருப்புக்கொடி காட்டுவதா?- எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கண்டனம்

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி சமீப காலமாக மட்டுமல்ல எப்போதுமே தமிழகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இதை இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும், தற்போதைய பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.

பிரதமராக இருந்தபோது மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க வந்து படகுகளை கொடுத்தார். அதேபோன்று சென்னை ஆவடியில் ஆயுத தொழிற்சாலை கண்காட்சி நடந்ததை தொடங்கி வைத்தார்.

ஆனால் அப்போது அவர் வந்தபோது எதிர்கட்சியினர் கருப்பு கொடி காட்டினார்கள். தமிழகம் ராணுவ ஆயுத தொழிற்சாலை உற்பத்தியில் சிறந்த இடம் என்பதனால் தான் 5 மாவட்டங்களில் அதை ஏற்படுத்த பிரதமர்மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் புதிதாக 2 ½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பிரதமர் மோடி ஆட்சியில் இதுவரை ரூ.5 ½ லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்று யாரும் செய்ததில்லை. தற்போது வருகிற 27-ந்தேதி மதுரையில் ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கி வைக்கப்படுகிறது.

எனவே பிரதமர் மோடி தமிழகத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டவர் தான். கஜா புயல் பாதிப்பின்போது ஏன் அவர் வரவில்லை என மீண்டும் மீண்டும் தவறாக பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி உடனே முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார்.

தொடர்ந்து டுவிட்டரில் தனது வருத்தத்தினை பதிவு செய்தார். தமிழக பிரதிநிதிகளாக என்னையும், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் என எங்களை அனுப்பி வைத்து தங்கி பணியாற்ற வைத்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் இது போன்று செய்தாரா?. எதிர் மறை பிரச்சாரம் எடுபடாது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரும் வகையில் தமிழகத்திலும் மிகப்பெரிய அடித்தளம் ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். டெல்லி பொதுக்குழுவில் பேசிய பிரதமர் மோடி, நிலையான ஊழலற்ற ஆட்சி குறித்தும், நிலையற்ற ஆட்சி குறித்தும் தெளிவு படுத்தியுள்ளார். நிலையான ஊழலற்ற ஆட்சி மீண்டும் கொடுக்க பிரதமர் மோடி ஆட்சிக்கு வரவேண்டும்.

இதற்காக பா.ஜனதா சிறப்பான அடித்தளத்தை அமைத்து வருகிறது. ஜனவரி 26-ந்தேதி ஒரு வாக்குச்சாவடி ஒரு நிர்வாகி என சுற்றுப்பயணம் செய்து தமிழகம் முழுவதும் உள்ள 66 வாக்குச்சாவடிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறோம். பிப்ரவரி 1 முதல் 10-ந் தேதி வரை 5 வாக்குச்சாவடிக்கு ஒரு நிர்வாகி என்ற அளவில் சுற்றுப்பயணம் செய்து பணி செய்கிறோம்.

தாமரை ஜோதி என்ற திட்டத்தில் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டி வீட்டு முன்பு தாமரைக்கோலம், விளக்கு அமைத்து ஏற்றி வைக்கிறோம். தமிழகத்தில் பா.ஜனதா சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளது. பிரதமர்மோடி மதுரைக்கு வருவதையொட்டி 18-ந்தேதி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பங்கேற்கிறார்.

தொடர்ந்து 20-ந்தேதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி வருகிறார். தமிழகத்திற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டுவோம் என்பது சரியல்ல.

கொடநாடு சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து சட்ட ரீதியான விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும். பொய் குற்றச்சாட்டு சுமத்தி ஒரு ஆட்சியை கலங்கப்படுத்த முடியாது. நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியாது. மு.க.ஸ்டாலின் உண்மை என்கிறார். அது அவர் தரப்பு. அ.தி.மு.க.வினர் பொய் என்கின்றனர். இருவருமே இது தொடர்பாக தமிழக கவர்னரை சந்தித்துள்ளனர். அது அவர்கள் உரிமை. எது உண்மை என சட்ட ரீதியாக தீர்வு ஏற்படுத்தப்படும்.

கஜா புயலுக்கு நிவாரண உதவி சரியாக வழங்கப்பபடாத நிலையில் பொங்கலுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடி வரை ஒதுக்கி ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு கொடுத்ததை தவறு என கூற முடியாது. உதவி செய்வது நல்ல திட்டம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜையன் உள்பட பலர் உடனிருந்தனர். #tamilisai #pmmodi #gajacyclone

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …