ஸ்கொட்லாந்தில் உள்ள க்ளாஸ்கௌவ் பல்கலைக்கழகம் (University of Glasgow) நடத்திய ஆய்வில், தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்பவர்களுக்கு 45 சதவிகிதம் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.சில வருடங்களுக்கு முன்பு வரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் சைக்கிள். கிராமம், நகரம் வேறுபாடுகளின்றி, எல்லோரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. வயது முதிர்ந்த மனிதர்கள்கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள். பைக், காரெல்லாம் வரத் தொடங்கியபிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது. கிராமங்களில் கூட, சைக்கிள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது.
சைக்கிள் பயன்படுத்துவது, ‘சுற்றுச்சூழலைக் காக்கும் என்பது ஒருபுறம் இருக்க, அதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படும்.
டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.
சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.
இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் வராது.
உடல் எடையைக் குறைக்க உதவும்.
சைக்கிள் ஓட்டுபவர்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சினை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.
சைக்கிள் ஓட்டுபவர்கள், எடுத்தவுடன் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டாம். 15 நிமிடத்தில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும், தூரத்தையும் அதிகப்படுத்துங்கள்.
தாங்கமுடியாத மூட்டு வலி, அதிக உடல் எடை, இதயக்கோளாறு போன்ற பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று சைக்கிள் ஓட்டவும்.
வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்தே, சைக்கிள் ஓட்டும் நேரமும் வேகமும் அமைய வேண்டும்.